Sunday, October 2, 2011

அவசரமாய் வந்த "அவசரம்"

என் இனிய பதிவு நண்பர்களுக்கு வணக்கம். இதனை ஆரம்பித்து பல மாதங்கள் என்றாலும் இதுவரை நான் எதுவுமே எழுதவில்லை. எழுத எதுவுமே இல்லை என்றில்லை. நிறைய இருக்கிறது. ஆனால் எழுதுவதைப்பற்றி சிந்திக்கவில்லை. இப்போது எப்படி என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அண்மையில் நான் பார்த்த ஒரு விடயம் எனக்குள்ளும் சில உணர்வுகளை தூண்டி எழுதச் சொன்னது. எனவே அவற்றைப்பற்றிய என்னுடைய முதல் பதிவை தொடர்கிறேன்.
அண்மையில் பார்த்த ஒரு விடயம் "அவசரம்" குறும்படம்.   வழமையான பொழுது காலை நண்பன் கஜதீபனிடமிருந்து டெலிபோன் அழைப்பு ("அவசரம்" குறும்பட இயக்குனர்) இன்று மாலை 4.30 க்கு கொசி உணவக மண்டபத்தில் குறும்படம் திரையிடுகிறோம் நீங்களும் வாருங்கள் என்றார். சரி என்று சொல்லிவிட்டு மாலை 3.30 க்கு விட்டிலிருந்து புறப்பட்டேன். உண்மையில் படத்தினை கடந்த 22ம் திகதி கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் வெளியிட்டு திரையிட்டிருந்த போதிலும், 29ம் திகதி அன்றுதான் பத்திரிகை நண்பர்கள், ஆர்வலர்கள், நலன்விரும்பிகள் என எல்லோருக்கும் படம் திரையிடப்பட்டது. படத்தில் தோன்றியதில் ஒருசிலர் தவிர்ந்த ஏனையோர் என் நண்பர்களாக இருந்த போதிலும் ஒரு பார்வையாளனாக கலந்துகொண்ட நிகழ்ச்சி."பனைமரக்காடு" திரைப்பட இயக்குனர், மல்லாகம் பதில்நீதவான், நெடுந்தீவு முகிலன், உட்பட பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள். மங்கள விளக்கேற்றல், வரவேற்பு. அறிமுகவுரை என் விழா தொடர்ந்தது. படம் திரையிடப்பட்டது.
முடிந்ததும் அனைவரும் பாராட்டினார்கள் ஏனென்றால் அவர்களின் முதல் முயற்சி. வந்திருந்தவர்கள் ஒரு சில குறையையும், அதனை நிவர்த்தி செய்யும் முறைகளையும் கூறினார்கள். அவற்றை ஏற்றுக்கொண்ட இயக்குனர் "இது எண்களின் கன்னி முயற்சி வாழ்த்தியவர்களுக்கு நன்றிகள். நிச்சயமாக அடுத்த படைப்பில் பிழைகளை திருத்துவோம்" என்றார். சரி என்னுடைய பார்வையில் படத்தை சொன்னால் இயக்கம் எடிட்டிங் படத்தின் பெரும்பங்கு, அபிராமனின் இசை உணர்வுகளை மீட்டுகின்றது. இவ்வளவு பலம் இருந்தும் பழகிப்போன கதை, கதையில் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம், மேலும் சித்தார்த்தின் நடிப்பு இன்னும் கொஞ்சம் தேவை. ஒருசில காட்சிகளில், பேச்சுக்களில் இந்திய சினிமா (தனுசின் ஆடுகளத்தின் ஒரு காட்சி) தெரிகின்றது. வேறு குறைகள் என்றில்லை. இயக்குனர் தொடர்ந்து கூறும்போது ஒரு சில காட்சிகள் பாதுகாப்பு நிமித்தம் காரணமாக படமாக்க முடியவில்லை. எடுத்த காட்சிகளை தொகுத்திருந்தோம் என்றார். அந்த காட்சிகளும் வந்திருந்தால் படம் சிலவேளை முழுமை பெற்றிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. மாறிவரும் நிலைமைகளுக்கு மத்தியில் இவ்வாறானதான முயற்சி வரவேற்கத்தக்கதொன்று. இவ்வாறு யாழ்ப்பாணத்தில்  வந்திருக்கின்ற குறும்பட கலாச்சாரத்தை நல்ல முயற்சிகளுக்காய், நல்ல விடயங்களை மக்களுக்கு எடுத்து உரைப்பதற்காய் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்திய சினிமா கலாச்சாரத்துக்குள் இருக்கும் இளைஞா்கள் அதிலிருந்து விடுபட்டு யாழ்ப்பாண சினிமாவை,  எந்த நாட்டுக்கு சென்றாலும் இது யாழ்ப்பாண சினிமா என்று சொல்லுமளவுக்கு எங்கள் கலை, கலாச்சாரம், பேச்சு,உரைநடை என்பவற்றை புகுத்தி வெற்றிபெற வைக்க வேண்டும் என்று இவர்களை மட்டுமில்லாது குறும்படங்களோடு சம்மந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்வதோடு "அவசரம்" குழுவினரின் முயற்சிகள் தொடர்ந்து வெற்றி பெற அன்போடு வாழ்த்துகிறேன்.  
 





No comments:

Post a Comment